பதிவு செய்த நாள்
21
மார்
2020
01:03
ஆனைமலை: கோட்டூர் மலையாண்டிபட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோட்டூர் மலையாண்டிபட்டணம் உச்சி மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 3ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
கடந்த, 11ம் தேதி கொடியேற்றம், 17ம் இரவு சக்தி கும்பஸ்தாபனம், 18ம் தேதி மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், இரவு, 7:30 மணிக்கு பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது. விரதமிருந்த, 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி, பூமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பெண்கள் குண்டத்தில் இருந்த பூ அள்ளிக்கொடுத்து அம்மனை வழிபட்டனர். காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இன்று மாலை, 7:00 மணிக்கு திருத்தேர் நிலை நிறுத்தம், பரிவேட்டை நடக்கிறது. வரும், 27ம் தேதி மதியம், 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.கொரோனா பாதிப்பை தவிர்க்க, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கோவிகளுக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி கோவில் திருவிழா நடந்தது. பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ரோடுகளிலும், கோவில் வளாகத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.