தி.மலை கிரிவலப்பாதையில் சாதுக்கள் விரட்டியடிப்பு
பதிவு செய்த நாள்
27
மார் 2020 04:03
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் இருந்த சாதுக்களை, போலீசார் விரட்டியடித்து, ஒலிபெருக்கி மூலம், கொரோனா வைரஸ் எச்சரிக்கை அறிவிப்பு செய்தனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள, அஷ்டலிங்க கோவில்கள் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படவில்லை.
கோவில் சிவாச்சாரியார்கள் மட்டும் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். நேற்று காலை போலீசார், கிரிவலப்பாதையில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு எச்சரிக்கை விடுத்தனர். அப்போது, மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்; தேவையின்றி வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர். தொடர்ந்து, கிரிவல பாதையில் கூட்டம், கூட்டமாக தங்கியிருந்த சாதுக்களை போலீசார் விரட்டி அடித்தனர். இந்த சூழ்நிலையிலும், தினமும் கிரிவலம் செல்லும் பழக்கமுடைய உள்ளூர் பக்தர்கள் சிலர், நேற்று மாலை கிரிவலம் சென்றனர். எச்சரிக்கையை மீறி, திருவண்ணாமலை கடலை கடை தெரு, குமரக்கோவில் பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில், நேற்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது.
|