பதிவு செய்த நாள்
26
ஏப்
2020
11:04
நாமக்கல்: கிருத்திகை விழாவை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் நடந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் நேற்று, நாமக்கல் பகுதி முருகன் கோவில்களில் பக்தர்கள் யாருமின்றி, கிருத்திகை விழா நிகழ்ச்சியில் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
* நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.
* நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு முத்தங்கி, அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
* நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி கந்தகிரி மலைக்கோவிலில் பழனி யாண்டவர் கோவிலில் சுவாமிக்கு வெண்பட்டு டன் அலங்காரம் செய்யப்பட்டது.
* மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அனைத்து கோவில்களிலும் ஆகம விதிப்படி அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு, காலை, 10:00 மணிக்குள் நடை அடைக்கப்பட்டது. ஊரடங்கால் பக்தர்கள் கோவிலுக்கு வரவில்லை.