பதிவு செய்த நாள்
26
ஏப்
2020
12:04
மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி பள்ளிவாசலில், புனித ரமலான் நோன்பு கஞ்சி தயாரிக்க, அரசு சார்பில் ஒதுக்கீடு செய்த அரிசியை, பயனாளிகளுக்கு அமைச்சர் அன்பழகன் வழங்கினார். தமிழகத்தில் நடப்பாண்டில், 2,895 பள்ளிவாசல்களுக்கு ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க அரசு சார்பில், 5,450 டன் அரிசியை வழங்க, முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில், 29 பள்ளிவாசல்களில், 20 ஆயிரத்து, 595 பயனாளிகளுக்கு வழங்க, 82 டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, நோன்பு கஞ்சி தயாரிக்க, அரிசி வழங்கும் நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பள்ளிவாசலில், கலெக்டர் மலர்விழி தலைமையில் நேற்று நடந்தது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், பயனாளிகளுக்கு நோன்பு கஞ்சி அரிசி வழங்கினார். நிகழ்ச்சியில், டவுன் பஞ்., செயல் அலுவலர் காதர், வட்ட வழங்கல் அலுவலர் சத்யாபிரியா மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.