பதிவு செய்த நாள்
27
ஏப்
2020
12:04
மாமல்லபுரம் : சுற்றுலா முடக்கத்தால், மாமல்லபுரம், பழங்கால சூழலுக்கு மாறியதை, உள்ளூர் மக்கள் உணர்ந்து, நெகிழ்கின்றனர்.
கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு, பல்லவர் சிற்பங்கள், மாமல்லபுரத்தில் உள்ளன. இவ்வூர், கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட கலைச்சின்னங்கள், உள், வெளிநாட்டுப் பயணியரை கவர்ந்து, சுற்றுலா வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள், சுற்றுலாவை மேம்படுத்தி, கடந்த, 15 ஆண்டுகளாகவே, பயணியர் குவிகின்றனர்.
கடந்த, 35 ஆண்டுகளுக்கு முன், இவ்வூர் சிற்றுார் கிராமம். சுற்றுலாப் பயணியர், சொற்பமாக வந்தனர். தென்னங்கீற்று வேய்ந்த, சில விடுதிகளே இயங்கின. உள்ளூரில் வசித்த, சில ஆயிரம் பேரைத் தவிர்த்து, பிற பகுதியினர் நடமாட்டம் இல்லை. நாளடைவில், சுற்றுலா மேம்பட்டு, நகர்ப் பகுதியாக வளர்ச்சியடைந்தது. பயணியர் குவிந்தனர்; விடுதிகள் உள்ளிட்டவை அதிகரித்தன. மது, போதை, பாலியல் என பெருகி, சுற்றுலாவைவிட, உல்லாச கேளிக்கை பிரதானமானது. பல ஆண்டுகளாக, எந்நாளிலும் அலைமோதும் பயணியர் கூட்டம், வாகன நெரிசல் என, திண்டாடியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மாதம், 24ம் தேதி அமல்படுத்திய தேசிய ஊரடங்கு, மே மாதம், 3ம் வரை நீடிக்கிறது.இதனால், சுற்றுலா, அதை சார்ந்த அனைத்தும் முடங்கி, மாமல்லபுரம் வெறிச்சோடி உள்ளது. கடந்த, 35 ஆண்டுகளுக்கு முந்தைய, பழங்கால சூழல், மீண்டும் ஏற்பட்டுள்ளதை, இப்பகுதியினர் உணர்ந்து நெகிழ்கின்றனர்.