சிவகணங்களான புஷ்ப தந்தன், மாலியவான் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டிருந்தனர். அவர்களை பூமியில் பிறக்கும்படி சபித்தார் சிவபெருமான். அவர்களில் மாலியவான் சிலந்தியாகவும், புஷ்ப தந்தன் யானையாகவும் பிறப்பெடுத்தனர். காட்டில் இருந்த சிவலிங்கம் ஒன்றை வழிபட்டு வந்தனர். சிவலிங்கத்தின் மீது மீது வெயில், மழை படாதபடி, சிலந்தி வலை பின்னி பாதுகாத்தது. அங்கு வந்த யானை ‘‘ஐயோ! சுவாமியின் மீது ஒட்டடை படிந்துள்ளதே என வலையை சிதைத்தது. இதுவே தினமும் தொடர்கதையானது. ஒருநாள் வலையை யானை துதிக்கையால் இழுப்பதை பார்த்தது சிலந்தி. கோபத்தில், யானையின் துதிக்கைக்குள் புகுந்து கடித்து அதைக் கொன்றது. சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவன், மறுபிறவியில் கோச்செங்கட்சோழன் என்னும் மன்னராகப் பிறக்கச் செய்தார். முற்பிறவியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்த சோழன், யானைகள் ஏற முடியாதபடி வாசல் குறுகலாகவோ, அல்லது படியேறி மாடியில் வழிபடும் விதமாகவோ கோயில்களைக் கட்டினான். இதில் சிவனுக்கு 70ம், பெருமாளுக்கு மூன்றுமாக 73 கோயில்கள் கட்டினார். இந்த மன்னர் சிலந்தியாக இருந்த போது வழிபட்ட சிவ லிங்கமே திருச்சி அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் மூலவராக உள்ளது.