பதிவு செய்த நாள்
15
ஜூன்
2020
09:06
பல்லடம்: பல்லடத்தில் உள்ள சில கோவில்களில், அரசு உத்தரவை மீறி, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், மற்றும் கோவில்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. நோய் தொற்று பரவும் அபாயம் கருதி, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், கோவில் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தினசரி பூஜைகள் செய்யலாம் என்றும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், பல்லடத்தில் உள்ள சில கோவில்களில், பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அரசு உத்தரவை பின்பற்றி, பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும், ஒரு சில கோவில்களில் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அறநிலைதுறைக்கு உட்பட்ட கோவில்களே இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுகின்றன. இது குறித்து அறநிலை துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகங்களும் கண்டு கொள்ளாததால், பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்து செல்வது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வரும் சூழலில், அரசு உத்தரவை மீறி நடக்கும் இதுபோன்ற செயல்களால், நோய் பரவும் என்பதால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.