பதிவு செய்த நாள்
09
ஜூலை
2020
05:07
குபேரன் நிதி வேண்டி சிவனை வணங்கிய தலம் திண்டிவனம் அருகிலுள்ள அன்னம்புத்துார் நிதீஸ்வரர் கோயிலாகும். இங்கு வழிபட்டால் நிதிநெருக்கடி, கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். பிரம்மா, திருமாலுக்கு இடையே தங்களில் உயர்ந்தவர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. தன் திருவடி அல்லது முடியை யார் கண்டு வருகிறார்களோ அவரே உயர்ந்தவர் என சிவன் தீர்ப்பளித்தார். பன்றியாக உருமாறிய திருமால் பாதம் நோக்கியும், அன்னமாக மாறிய பிரம்மா முடியை நோக்கியும் புறப்பட்டனர். ஆனால் இருவருக்கும் வெற்றி கிடைக்க வில்லை. இருப்பினும் பிரம்மா முடியைக் கண்டதாக பொய் சொல்லவே, அவரை அன்னப்பறவையாக மாறும்படி சிவன் சபித்தார். பாவ விமோசனம் பெற இத்தலத்தில் குளம் ஒன்றை உருவாக்கி சிவபூஜை செய்தார் பிரம்மா. அதன் பயனாக சுயவடிவம் பெற்றதோடு, இழந்த படைப்புத் தொழிலையும் மீட்டார். அன்னமாக வந்த பிரம்மா புதுவாழ்வு பெற்றதால் இத்தலம் அன்னம்புத்துார் எனப் பெயர் பெற்றது.
பதும நிதி, மகாபதும நிதி, மகா நிதி, கச்சப நிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீல நிதி, சங்க நிதி என்னும் எட்டு வகைச் செல்வங்களுக்கு அதிபதி குபேரன். அவர் இத்தலத்தில் சிவனை வேண்டிய வரம் பெற்றதால் சுவாமிக்கு ‘நிதீஸ்வரர்’ எனப் பெயர் வந்தது.
வெள்ளிக்கிழமை, பூசம் நட்சத்திரம், பவுர்ணமி, அட்சய திரிதியை, தீபாவளி ஆகிய நாட்களில் இங்கு சுவர்ண புஷ்ப அர்ச்சனை நடத்துகின்றனர். இதை தரிசிப்பவர்களுக்கு நிதிநெருக்கடி தீரும். பணம் கையில் தங்கும். கடன்பிரச்னை மறையும். குழந்தை வரம் பெற கனக திரிபுர சுந்தரி அம்மன் பாதத்தில் வெண்ணெய் வைத்து வழிபடுகின்றனர். இந்த வெண்ணெயைச் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொன், பொருள் சேர கார்த்திகை மாதம் வளர்பிறை திரிதியையான ரம்பா திரியை அன்று அம்மனுக்கு நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்கின்றனர்.
இங்குள்ள குருபகவானுக்கு வியாழக்கிழமையில் பரிகார பூஜை செய்தால் குருதோஷம் அகலும். இங்குள்ள கல்யாண சுப்பிரமணியருக்கு மாலை அணிவிக்க திருமண யோகம் அமையும். லட்சுமி கணபதி, கால பைரவர், தன ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் இங்குள்ளன.
எப்படி செல்வது: திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் 9 கி.மீ.,
விசேஷ நாட்கள்: அட்சய திரிதியை, நவராத்திரி, மகாசிவராத்திரி.