பதிவு செய்த நாள்
14
ஆக
2020
10:08
திருப்பூர்:திருப்பூர், பொங்குபாளையம் அருகே, 600 ஆண்டு பழமையான, விஜயநகர பேரரசு காலத்து, வீரநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பாரம்பரியத்தை பின்பற்றி வாழ்ந்த கொங்கு தமிழர்கள், இறந்தவர்கள் நினைவாக நடுகல் எழுப்பி வழிபடும் வழக்கத்தை பின்பற்றி வந்தனர். தங்களுக்கு துன்பம் வரும் போது, நடுகல்லில் உள்ள வீரனுக்கு படையலிட்டு வழிபட்டால், துன்பம் நீங்கும் என்பதும், மறைந்த வீரர்களின் ஆசி கிடைக்கும் என்பதும், அவர்களின் நம்பிக்கை.
போரில் இறந்த வீரனுக்கு மக்கள் எழுப்பிய நடுகல் கோவில், பொங்குபாளையம் அருகே இருப்பது தெரியவந்துள்ளது.அதை, வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகிகள் பொன்னுசாமி, குமார், சாமியப்பன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.ஆய்வு மைய இயக்குர் ரவிக்குமார் கூறியதாவது:அக்காலத்தில், நாட்டை காக்க காவல் புரிந்த வீரர்கள், போரின் போது நாட்டை காக்க வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில், நடுகல் எழுப்பி வழிபட்டு வந்துள்ளனர். பொங்குபாளையம் பகுதியில், அதுபோன்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. பல நுாற்றாண்டை கடந்தும், நடுகற்கள் வழிபாட்டில் உள்ளன. அங்குள்ள நடுகல், 120 செ.மீ.., அகலம், 43 செ.மீ., உயரம் கொண்டது. அதில் வீரர், வலது கையில் ஓங்கிய வாளுடன், ஆடை, அணிகலனுடன் கம்பீராக நிற்கிறார். அருகிலேயே, கையில் தாமரை மொட்டு ஒன்றை ஏந்தியபடி நிற்கும் பெண் சிற்பமும் உள்ளது.சிற்ப வேலைபாடு, சிற்பத்தில் அலங்காரம், ஆடை, அணிகலன் போன்ற அம்சங்களை பார்க்கும் போது, 600 ஆண்டு பழமையான விஜயநகர பேரரசு காலமாக இருக்க வாய்ப்புள்ளது. பண்டைய தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக உள்ள நடுகற்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.