திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது முத்துவடுகநாதபுரம் புதுார். இங்கு 300 ஆண்டு பழமையான மண் சுவர், பனை மரம், ஓலையால் வேயப்பட்டதானிய களஞ்சியம் உள்ளது. எம்.புதுார் ஆறுமுகம் கூறுகையில், இந்த சவுக்கையை நாங்கள் ஆசாரம் என்று கூறுவோம்.எங்களது மூதாதையர்களால் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு வந்த கந்தன் ஞானிக்காக ஒரு பனை மரத்தை வைத்து கட்டினர்.முன்பு மதுரைக்கு செல்லும் வண்டிப் பாதையாக இந்த பகுதி இருந்தது. அப்போது வழிப்போக்கர்கள் இங்கு வந்து தங்குவதும், மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்கும் இடமாக இருந்துள்ளது.
இன்றைக்கும் வயலில் விளையும் நெல் மூடைகளை பாதுகாக்கும் வசதி இதன் மச்சு வீட்டில் உள்ளது.இங்கு சம்பூரண ராமாயணம் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது இருந்தது. ஆவணி பிறந்து மழை பெய்யாவிட்டால் ஏட்டை திறந்து ராமாயணத்தை வாசித்து உபன்யாசம் செய்யும் வழக்கமும் உண்டு. நள்ளிரவு வரை படித்து விட்டு செல்வோம். இங்கு படுக்க மாட்டோம். ராமர் பட்டாபிேஷகத்தை இன்றும் இங்கு கொண்டாடுகிறோம். முன்பு இங்கு பிறந்த குழந்தைக்கு ராமேஸ்வரத்தில் முடி இறக்கும் பழக்கம் கூட இருந்தது.30 ஆண்டுகளுக்கு முன் பட்டியல் கல் வைத்து பராமரித்துள்ளோம். அவ்வப்போது கூரையை மாற்றி வருகிறோம். என்று சந்தோஷமாக கூறுகிறார். இப்போதும் இங்கு வந்து தங்கும் சிலருக்கு உணவு வழங்குவதை இப்பகுதியினர் விடாமல் தொடர்கின்றனர். பாரம்பரியத்தை மறக்காமல் முன்னோர்களின் ஆசாரத்தை தொடரும் இவர்களை பாராட்ட 90476 71418ல் பேசலாம்.