பதிவு செய்த நாள்
13
செப்
2020
07:09
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று, வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.புதுச்சேரி, காரைக்கால் அருகே, திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவான், தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக தலங்களில், சனி பரிகார தலமாக, திருநள்ளாறு விளங்கி வருகிறது. கடந்த, 7ம் தேதி முதல், இ - பாஸ் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், சனீஸ்வரர் கோவிலுக்கு வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று சனிக்கிழமை என்பதால், கூட்டம் அதிகமாகவே இருந்தது. பக்தர்கள் அனைவரும், உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, நளன் குளத்தில் தண்ணீர் இல்லாததால், புனிதநீரை தலையில் தெளித்து, சனீஸ்வரரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.