பதிவு செய்த நாள்
14
அக்
2020
12:10
கோவை: கோவை, முத்தண்ணன் குளக்கரையில் உள்ள மூன்று கோவில்களை ஏழு நாட்களுக்குள் அகற்றுமாறு, மாநகராட்சி நோட்டீஸ் வினியோகித்ததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எங்க சாமியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உணர்வுபூர்வமாக எதிர்ப்புக்குரல் எழுப்புகின்றனர். கோவை, முத்தண்ணன் குளக்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ரூ.31.25 கோடியில் மேம்படுத்தும் பணியை, மாநகராட்சி மேற்கொள்கிறது. இதற்காக, ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால், 137 வீடுகளை இடிக்காமல், நிறுத்தி வைத்துள்ளது.
மாநகராட்சி நோட்டீஸ்: இச்சூழலில், சுண்டப்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மதுரை வீரன் மற்றும் பட்டத்தரசியம்மன் கோவில்களை இடிக்கப் போவதாக, நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.அதில், 7 நாட்களுக்குள் கோவிலை வேறிடத்துக்கு, மாற்றிக் கொள்ள வேண்டும். தவறினால், மாநகராட்சியால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, அதற்கு செலவிடப்படும் தொகை தங்களிடம் வசூலிக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
மக்கள் கடும் எதிர்ப்பு: இதற்கு அப்பகுதி மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவிலுக்கு முன் நேற்று திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது; அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.வீடுகளை இடித்த போது பொறுத்துக் கொண் டோம்; கோவில்களை இடிக்க அனுமதிக்க மாட்டோம்; எங்களது குல தெய்வங்களாக வணங்கி வருகிறோம். கோவில்களையாவது விட்டு வைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதியில் வசிக்கிறோம். குளக்கரை ஆக்கிரமிப்பு என கூறி, வீடுகளை இடித்து விட்டு, வெவ்வேறு பகுதியில் மாற்று இடம் வழங்கியிருக்கின்றனர். எங்களது குல தெய்வமாக, இங்கிருக்கும் கோவில்களில் வழிபாடு நடத்துகிறோம்.மாரியம்மன் கோவில், 57 ஆண்டுகள் பழமையானது. வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்திருந்தாலும், விசேஷங்களுக்கு இங்கு தான் கூடுகிறோம். கோவில்களை இடிக்காமல், மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.
எல்லாமே ஆக்கிரமிப்புதான்!
குளத்தை ஆக்கிரமித்துதான், உணவு தானிய கிடங்கு கட்டப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை கரும்பு இனப்பெருக்கு மையம் கட்டப்பட்டிருக்கிறது. அவற்றை மாநகராட்சியால் இடிக்க முடியுமா?அரசு துறை நிர்வாகங்கள் ஆக்கிரமித்து, கட்டியுள்ள கட்டடங்களை அகற்றாமல், மக்கள் வசிக்கும் வீடுகளையும், கோவில்களையும் இடித்தால் போதுமா. மாற்று இடம் வழங்கி விட்டு, வீடுகளை இடித்ததால் பொறுத்துக் கொண்டோம். கோவில்களை இடிக்க அனுமதிக்க மாட்டோம். கோவில்களை இடிப்பதை, மாநகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.குளத்தை ஆக்கிரமித்துதான், உணவு தானிய கிடங்கு கட்டப்பட்டுள்ளது. வேளாண் பல்கலை கரும்பு இனப்பெருக்கு மையம் கட்டப்பட்டிருக்கிறது. அவற்றை மாநகராட்சியால் இடிக்க முடியுமா? அரசு துறை நிர்வாகங்கள் ஆக்கிரமித்து, கட்டிஉள்ள கட்டடங்களை அகற்றாமல், மக்கள் வசிக்கும் வீடுகளையும், கோவில்களையும் இடித்தால் போதுமா