பதிவு செய்த நாள்
20
நவ
2020
09:11
நாகப்பட்டினம்: திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது, சிக்கல் சிங்காரவேலரின் மேனி வியர்க்கும் மகிமை நடந்தது.
நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான், முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா விமர்சையாக நடக்கும். கொரோனா தொற்று காரணமாக கோவிலில் நடக்கும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.நேற்று காலை வெள்ளித் தேரில் சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கோவில் உள்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. திருச்செந்துாரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக திருத்தேரில் முருகப்பெருமான் ஆவேசத்துடன் எழுந்தருளி அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி நடந்தது. அன்னையிடம் வேலை பெற்று தன் சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது.