பதிவு செய்த நாள்
20
நவ
2020
12:11
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.முருகனுக்கான முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழா முதன்மையானது. இவ்விழா கடந்த மாதம், 15ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் கஜமுகன், சிங்கமுகன், தாராகசூரன், பத்மாசூரனை வதம் செய்யும் காட்சிகள், பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்படும்.இறுதியில் சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களும் விரத்தை நிறைவு செய்கின்றனர். கொரோனா தடுப்பு விதிமுறை நடைமுறையில் இருப்பதால், இம்முறை சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. மீண்டும் கோவில் நடை, மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு, காலை, 5:00 முதல் 7:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை பார்வையிடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்கள் விரதத்தை வீட்டிலிருந்து நிறைவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று, யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.