தேர்தல் வருகிறது., புறப்படுவோம் கோவிலுக்கும், மடத்திற்கும்.,
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2020 03:11
மயிலாடுதுறை: சட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை துவக்கி உள்ளார். வெற்றி கிடைக்க வேண்டி அவர் தருமபுரம் ஆதீன மடாதிபதியை சந்தித்து ஆசி பெற்றார். மாநில அரசின் கெடுபிடிகளை தாண்டி உதயநிதி, கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து நாகப்பட்டினத்தில் பிரசாரம் செய்தார். கொரோனா இருப்பதால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என இவரது பிரசாரத்திற்கு போலீசார் தடை விதித்தனர். இருப்பினும் பிரசாரம் செய்தே தீருவேன் என வேனில் சென்றதால் போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில் உதயநிதி, பிரசாரத்திற்கு இடையே, நேற்று (21 ம் தேதி) இரவில் , மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது 27-வது குருமகா சந்நிதானம் உதயநிதிக்கு திருநீறு பூசி ஆசி வழங்கினார். தொடர்ந்து, தமிழ்க்கடவுள் சேயோன் (முருகன் பாமாலை) என்ற மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை தொகுத்தளித்த நூலினை தருமபுரம் ஆதீனம் வெளியிட உதயநிதி ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதியும் சென்ற மடம்: 1972-ஆம் ஆண்டு தருமபுரம் ஆதீன கல்லூரியின் வெள்ளி விழா ஆண்டின்போது மறைந்த கருணாநிதி, தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகா சந்நிதானத்தை சந்தித்து ஆசிபெற்ற புகைப்படத்தை நினைவு பரிசாக உதயநிதிக்கு குருமகாசன்னிதானம் வழங்கினார்.