பதிவு செய்த நாள்
17
டிச
2020
05:12
இறைவழிபாட்டின் காலமாக கருதப்படும், மார்கழி மாதம் நேற்று பிறந்தது. இதையடுத்து, அதிகாலையில், வீடுகளில் பொங்கல் படைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என, பகவான் கிருஷ்ணர், மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறியிருக்கிறார்.அதேபோல், மார்கழி மாதம், ஆன்மிகத்தில், தேவர்களுக்கான அதிகாலை நேரமாகக் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த மாதம் முழுதும் இறை வழிபாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.மார்கழி, தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, வாசலில் வர்ணக் கோலமிட்டு, இம்மாதம் முழுதும் இறைவழிபாடு செய்வது வழக்கம்.இம்மாதத்தில், ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. மேலும், வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு அதிகமாக இருக்கும். எனவே, சுத்தமான காற்றை சுவாசித்து, உடல்நலனை காக்கும் பொருட்டு, அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது.
மார்கழி மாத, அதிகாலை இறை வழிபாடு குறித்து, மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும் போற்றியுள்ளனர்.மார்கழி மாதம் கோவில்களில், அதிகாலை வழிபாட்டில் வேதங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன.திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமத் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, விநாயகர் சஷ்டி விரதம் ஆகியவை, இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மார்கழி முதல் நாளான நேற்று, சென்னை, புறநகரில் பெரும்பாலான இடங்களில் பஜனைகள் நடத்தப்படவில்லை.மார்கழி முதல் நாளான நேற்று, பலர் தங்கள் வீடுகளில் வர்ணக் கோலமிட்டு, பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர்.
குரோம்பேட்டையில், மூத்த குடிமக்கள் நலச்சங்கம் சார்பில், ஏழாம் ஆண்டு, பஜனை நிகழ்ச்சி, நேற்று துவங்கியது. நாகரிக உலகில், அவை மெல்ல மறைந்தாலும், சில இடங்களில், பஜனைகளுக்கு இன்னமும், முத்தோர் புத்துயிர் கொடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு நாளும், 10க்கும் மேற்பட்டோர், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருவாசகம் போன்ற பாடல்களை, அதிகாலை, 5:30 முதல் 7:00 மணி வரை, பாடியபடி, வீதி உலா வருகின்றனர்.அவர்களின் ஆன்மிக பாடல்கள், அதிகாலையில் மக்களை எழுப்பி விடுகின்றன
- நமது நிருபர் - .