பதிவு செய்த நாள்
24
டிச
2020
08:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 10-ம் நாளான இன்று நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்புக்காக, கோவில் முழுதும் அலங்கரிக்கும் பணிகள் நடக்கிறது. திருச்சி மாவட்டம் , ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த, 14ம் தேதி இரவு, மூலவர் அனுமதி பெறும் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவத்தின் போது, பகல் பத்து, ராப்பத்து என, 20 நாட்களும் திவ்யபிரபந்தம் அபிநயத்துடன் வாசிக்கப்படும். வரும், 25ம் தேதி அதிகாலை, 4:45 மணிக்கு, நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசலை கடந்து தரிசனம் தருவார். பின், ஆயிரங்கால் மண்டபம் அருகே, நம்பெருமாள் எழுந்தருள்வார். இதற்காக, கோவில் முழுதும் மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.