பதிவு செய்த நாள்
11
ஜன
2021
03:01
புதிய பார்லிமென்ட் அடிக்கல் நாட்டு விழாவில், உத்திரமேரூர் குடவோலை முறை தேர்தல் கல்வெட்டு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பின், உத்திரமேரூருக்கு வரும், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
பல்லவர்களால் திட்டமிடப்பட்டு, சோழர்களால் செப்பனிடப்பட்ட அற்புத நகரமாக உத்திரமேரூர் திகழ்கிறது. இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைகுண்ட பெருமாள் கோவிலும், பல்லவர்களால், நிறுவப்பட்டு, சோழர்களால் செழுமைப்படுத்தப்பட்டது. இக்கோவிலில், வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள்அதிகம் உள்ளன.பொதுவாக கோவில்களில், கல்வெட்டுகள் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும். ஆனால், வைகுண்டபெருமாள் கோவிலின் அடிப்பாகம் முழுதும், கல்வெட்டுகளால் நிறைந்த சிறப்பு மிக்க கோவிலாக உள்ளது.
ஊராட்சி தேர்தல் முறைகள் குறித்து, தமிழகத்தில் உள்ள கோவில்களில், சில கல்வெட்டுகள் கிடைத்தாலும், உத்திரமேரூரில் கல்வெட்டுகளில், கி.பி., 750 - 1250ம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து நிர்வாக பணிகளையும் குறித்து வைத்துள்ளனர்.தொடர்ந்து, 500 ஆண்டுகள் நடந்த ஊராட்சி முடிவுகள், கல்வெட்டின் மூலம் கிடைக்கக்கூடிய ஒரே ஊர், உத்திரமேரூர் மட்டுமே என, வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறப்பு வாய்ந்த குடவோலை தேர்தல் முறையை உலகுக்கு பறைசாற்றிய, உத்திரமேரூர் கல்வெட்டு குறித்து, பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் அடிக்கல் நாட்டுவிழாவில் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகளில், மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றியும், 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, உத்திரமேரூரில் மகா சபை மற்றும் மக்கள் சபை நடந்தது பற்றி, கல்வெட்டில் விரிவாக கூறப்பட்டுள்ளது, என்றும் சுட்டிக்காட்டி, பிரதமர் மோடி பேசினார். இதையடுத்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள் உள்ள உத்திரமேரூர் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.கோவிலில் கல்வெட்டுகள் பழங்காலத்து தமிழ் எழுத்துக்களில் உள்ளதால், அதை படிக்க முடியவில்லை. கல்வெட்டுகளின் முழு விபரங்களை, சிறு புத்தகமாக வெளியிட தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் விரும்புகின்றனர்.
குடவோலையின் சிறப்பு: குடவோலை முறை குறித்து, கல்வெட்டுகளில் தகவல்கள் உள்ளன. ஊரை நிர்வாகம் செய்யக்கூடிய தகுதியான நபர்களின் பெயரை, பனையோலையில், எழுத்தாணியால் எழுதி, அவற்றைகுடத்தில் இடுவர். அதில் ஒரு ஓலையை, காலை நேரம் எதுவென்றும், மாலை நேரம் எதுவென்றும் விபரமறியா குழந்தையை தேர்ந்தெடுக்க செய்வர்.
குழந்தை தேர்ந்தெடுக்கும் ஓலையில் இருக்கும் பெயரை உடையவர், மக்கள் பிரதிநிதியாக அறிவிக்கப்படுவர். இந்த தேர்தல் முறை, குடவோலை தேர்தல் என சிறப்பு பெற்றது.
சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட உத்திரமேரூர், 30 குடும்புகள் எனப்படும் வார்டுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு பிரதி என, 30 பிரதிநிதிகள் குடவோலை முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஏரி, தோட்டம், பொன், பொருள் என, தனித்தனி வாரியங்களுடன், குடும்புகள் செயல்பட்டுள்ளன. வேட்பாளரின் தகுதிகள், தகுதியற்றவர்கள் என்கிற அளவீடு ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான மக்களாட்சி முறைக்கு வித்திட்டது.குடவோலை முறை தேர்தல் குறித்து, கோவில் கல்வெட்டில் உள்ள தகவல்களை பார்வையாளர்கள் அறிந்துகொள்வதற்காக வைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், சில எழுத்துக்கள் மங்கிய நிலையில் உள்ளன. அதை சீரமைக்க வேண்டும்.