பதிவு செய்த நாள்
19
ஜன
2021
03:01
தஞ்சாவூர் : திருவையாறில், பிப்., 2ல் நடக்கவுள்ள ஸ்ரீசத்குரு தியாகராஜரின், 174வது ஆராதனை விழாவுக்கு, 200 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் ஸ்ரீசத்குரு தியாகராஜ சுவாமிகளின் ஆராதனை விழா, ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடக்கும். இவ்விழாவில், இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளில் உள்ள சங்கீத வித்வான்களும், இசை கலைஞர்களும் பங்கேற்று, இசை அஞ்சலி செலுத்துவர்.கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு ஆராதனை விழா வரும் பிப்., 1 மற்றும் 2 என, இரு நாட்கள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.நேற்று காலை, தியாகராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, விழாவுக்கான பந்தல்கால் நடப்பட்டது.
பிப்., 1ம் தேதி மாலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் விழா துவங்குகிறது. பிப்., 2ம் தேதி காலை, 5:30 முதல், 8:30 மணி வரை, உஞ்ச விருத்தி பஜனையும், 8:30 மணி முதல், 9:00 மணி வரை, நாதஸ்வர இசையும் நடக்கிறது.முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனை, காலை, 9:00 முதல், 10:00 மணி வரை நடக்கிறது. இரவு, 7:30 மணிக்கு ஸ்ரீசத்குரு தியாகராஜர் ஊர்வலத்துடன் விழா நிறைவு பெறுகிறது. கொரோனா தொற்றால், பஞ்சரத்ன கீர்த்தனையின் போது, 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.