பதிவு செய்த நாள்
20
ஜன
2021
11:01
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா மற்றும் கந்த சஷ்டி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு, தைப்பூச திருவிழா, 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 28ம் தேதி தைப்பூசத்தன்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா கூறுகையில்," மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 21ம் தேதி இரவு, வாஸ்து சாந்தி மற்றும் விநாயகர் பூஜையுடன் தைப்பூசத் திருவிழா துவங்கும். 22ம் தேதி, காலை, 7:00 முதல் 8:00 மணிக்குள், கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கும். 28ம் தேதி, திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்த்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராக, சப்பரத்தில் திருவீதி உலா நடக்கும். 28ம் தேதி காலை, 7:00 மணிக்கு மேல், கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்,"என்றார்.