தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 30 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். தற்போது திருப்பதியில் உள்ள பவன் தன்னுடைய சிறிய நன்கொடை இது என தெரிவித்துள்ளார். அவருடைய ஜனசேனா கட்சியில் உள்ள கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் அளித்த நன்கொடைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
“எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் நம் நாடு பல நூற்றாண்டுகளாக வலிமையுடன் இருந்து வருகிறது. ராமர் உருவாக்கி வைத்த உத்வேகம்தான் அதற்குக் காரணம். இந்த பூமியில் அமைதி தழைத்தோங்க ராமர் தான் காரணம். நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு. இங்குதான் மக்கள் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராமரின் ஆட்சி தான் மக்களிடையே பொறுமை உருவாக காரணமாக இருந்தது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அவர்களாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகிறார்கள்,” என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து முதல் சினிமா பிரபலமாக ராமர் கோயில் கட்ட நன்கொடை அளித்துள்ளார் பவன் கல்யாண். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் எனத் தெரிகிறது.