பதிவு செய்த நாள்
08
பிப்
2021
06:02
வடவள்ளி: மருதமலை படிக்கட்டு ஓரம் நேற்று, திடீரென காட்டு யானைகள் முகாமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று பகல், 2:00 மணிக்கு, பெண் யானைகள் மற்றும் ஒரு குட்டியுடன் காட்டு யானைகள், படிக்கட்டு பகுதிக்கு வந்துள்ளன.அவ்வழியாக சென்ற பக்தர்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர், அடிவாரத்திலிருந்து படிக்கட்டுகள் வழியாகவும், சாலை வழியாகவும் பக்தர்கள் வருவதை தடுத்து நிறுத்தினர்.அதன்பின், காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். படிக்கட்டு மற்றும் சாலை பகுதிக்கு இடையிலான பள்ளத்தில், காட்டு யானைகள் முகாம் கொண்டது. சுமார், 1:30 மணி நேர போராட்டத்திற்கு பின், காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள், வனத்துறையினர் விரட்டினர்.கோடைக்காலம் துவங்கி உள்ளதால், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும். எனவே, பக்தர்கள், படிக்கட்டுகள் மற்றும் சாலைகளில் கவனமாக இருக்குமாறு, வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.