நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவையொட்டி தீவட்டி பரிவாரங்களுடன், சிறப்பு பூஜைகள்நடத்தி கொடியேற்றப்பட்டது.
விழாவையொட்டி கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ணப் பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம் பொறித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் செயல் அலுவலர் பாலசரவணன், மாவட்ட ஆவின் தலைவர் சிவலிங்கம், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணைத் தலைவர் சக்திவேல், பேரூராட்சி செயல்அலுவலர் சரவணக்குமார், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, கோயில் பூஜாரிகள் உள்பட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று (பிப்.16) செவ்வாய்கிழமை அதிகாலையில் நத்தம் அருகே கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வருவர். பின் சந்தன கருப்புசுவாமி கோயிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். அங்கிருந்து பக்தர்களை ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு அழைத்து வருவர்.பின்னர் மஞ்சள் காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்குவர். தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் திருவிழா மார்ச் 2ல் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பூஜாரிகள் செய்து வருகின்றனர்.