சிறுவயதில் கெட்டவர்களாக இருப்பவர்கள் காலம் முழுவதும் அப்படியே இருப்பதில்லை. மனம் மாறி திருந்துபவர்களும் இருக்கிறார்கள். புகை பிடிப்பவர், குடிகாரன், கொலைகாரன் கூட திருந்துவதற்கான வாய்ப்பை ஆண்டவர் கொடுக்கவே செய்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் என்னும் வாலிபர் சிறு வயதில் புத்தி கெட்டுத் திரிந்தார். தீய பழக்கங்களால் உடல் நலம் கெட்டு நிற்கக்கூட முடியாத அளவுக்கு தளர்ச்சியடைந்தார். மருத்துவம் செய்தும் பலனில்லை. ஒருநாள் கூட்டம் ஒன்றில் ‘‘நீங்கள் ஜெபம் பண்ணும் போது, வேண்டுதல்களை அடைவோம் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது நிச்சயம் பெறுவீர்கள்’’ என்றார் பாதிரியார் ஒருவர். இந்த வசனத்தால் சார்லஸ் கவரப்பட்டார். மனதார நம்பி பிரார்த்தனை செய்ய தொடங்கினார். ‘‘ஆண்டவரே! இதுவரை தீயபண்புகளுடன் துஷ்டனாகத் திரிந்தேன். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன். இனி வாழ்வின் அடிப்படை விதிகளை மீற மாட்டேன். என்னை குணமாக்கும்’’ எனக் கண்ணீர் விட்டார். தீய பழக்கங்களை கைவிட்டார். அவரது விசுவாசம் ஆண்டவரைக் கவர்ந்தது. விரைவில் நல்வாழ்வு கிடைக்கப் பெற்றார்.