காஞ்சி மகாபெரியவரின் பக்தர் ஒருவருக்கு பக்கத்து வீட்டுக்காரரால் பிரச்னை ஏற்பட்டது. இருவருக்கும் ஓயாத சண்டை. பக்தரின் வீட்டு வாசலில் குப்பையை தள்ளி விடுவார் பக்கத்து வீட்டுக்காரர். அவர் வீட்டுச் சாக்கடை அடைத்துக் கொண்டால் இவர் சரியாக பராமரிக்காதது தான் காரணம் என்பார். பொதுச்சுவரில் ஆணியடித்துக் கொடி கட்டினால், அது எங்களுக்கும் சொந்தம் தானே... கேட்காமல் எப்படி ஆணி அடிக்கலாம் என ஆத்திரப்படுவார். வீட்டுக்கு வரும் விருந்தாளியின் ஆட்டோ சற்றுத் தள்ளி அவரது வீட்டு வாசலில் நின்றால் கூட திட்டுவார். இந்நிலையில் ஒருநாள் காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்தார். அப்போது பக்கத்து வீட்டு பிரச்னைக்காக போலீசில் புகார் கொடுக்க இருப்பதாக தெரிவித்தார். ‘‘ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தாயா... இல்லை அனுமதி கேட்க வந்தாயா?’’ எனக் கேட்டார் மகாபெரியவர். வெலவெலத்துப் போனார் பக்தர். ‘‘நீங்கள் சொல்கிறபடிச் செய்றேன் சுவாமி’’ என்றார். ‘‘மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி தான் இருப்பார்கள். பலாப்பழம் போல சிலர் முரடாக தோன்றலாம். ஆனால் மனதிற்குள் நல்லவர்களாக இருப்பார்கள். அவர் மீது மட்டும் தான் தவறு இருக்கிறதா, உன் மீது தவறே இல்லையா என்று யோசித்துப்பார். நீ மட்டும் தானா சொந்த வீட்டில் இருக்கிறாய்? அவனும் சொந்த வீட்டுக்காரன் தானே? இருவராலும் வீட்டை மாற்ற முடியாது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது தான் நல்லது. ஆளுக்கொரு மாதிரி தானே நம் முகமும் இருக்கிறது. அது போல நம் சுபாவமும் ஒவ்வொரு மாதிரித் தானே இருக்கும். நாம் நினைக்கிறபடியே மற்றவர் இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதே. நிம்மதியாக வாழ வேண்டுமானால் இதை நீ உணர வேண்டும். போலீசில் புகார் கொடுத்தால் உன் மீதுள்ள கோபம் அதிகமாகும். ஒவ்வொரு நாளும் நடக்கும் சண்டைக்கு போலீசின் உதவியை நீ நாட முடியுமா? தீராத தலைவலியை வரவழைக்காதே. பக்கத்து வீட்டுக்காரன் கத்தினால் பதிலுக்கு கத்தாதே. அடங்கிப் போ. நிம்மதியாக வாழ விரும்பினால் அவனிடம் தோற்றால் கூடத் தப்பில்லை. நாளடைவில் அடங்கி விடுவான். உன்னைப் புரிந்து கொள்ள ஆரம்பிப்பான். ஏதாவது சிரமம் வந்தால் வலியச் சென்று அவனுக்கு உதவி செய். பக்கத்து வீட்டுக்காரன் மனம் மாற வேண்டும் என அம்பாளிடம் பிரார்த்தனை பண்ணு’’ என்றார்.