நடுத்தரக் குடும்பம் ஒன்றில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் இருந்தனர். பெற்றோர் அமைதியானவர்கள். ஆனால் குழந்தைகள் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டபடி இருந்தனர். குழந்தைப் பருவத்திற்கே உரியது என்றெண்ணி பெற்றோர் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் நாளுக்கு நாள் முரட்டு சுபாவம் தீவிரமாகி கொண்டிருந்தது. பெற்றோர் கவலைப்பட்டனர். எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. இப்படியே விட்டால் வளர்ந்து ஆளானதும் பொறுப்பற்றவர்களாகி விடுவார்களே என வருந்தினர். ஒருநாள் ஊரிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்றாள் அம்மா. அங்கு வந்திருந்த மகான் ஒருவர் பக்தர்களின் பிரச்னைகளுக்கு எல்லாம் தீர்வளிப்பதாக கேள்விப்பட்டாள். மறுநாள் காலையில் கணவருடன் மகானை சந்திக்க வந்தாள். பிரச்னையை கேட்ட மகான் அவர்களுக்கு மந்திரம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார். அதன் பின் குழந்தைகள் ஒற்றுமையுடன் செயல்பட ஆரம்பித்தனர். அப்படி என்ன மந்திரம் அது? அது தான் கடுகு கம்பு மந்திரம். சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிடும் போதெல்லாம் அடுப்படிக்கு ஓடுவார் அப்பா. ஒரு கையில் கடுகையும், ஒரு கையில் கம்பு தானியத்தையும் கலந்து கொள்வார். சண்டைக்குத் தயாராகும் சிறுவர்களிடம், ‘‘என் கண்ணுகளா! இந்த கடுகு, கம்பை பிரித்துக் கொடுப்பவருக்கு பரிசு தருவேன்’’ என்பார். அவ்வளவு தான்... சண்டையை விட்டு பரிசுக்காக தானியத்தை பிரிக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர். நாளடைவில் சண்டையிடும் பழக்கம் மறைந்தது. . அவர்களின் மனம் மாறியது எப்படி? மாயாஜாலம் ஏதுமில்லை. மனதை திசை திருப்பும் வழிதான் இது. சண்டையிடும் எண்ணத்தை கைவிட்டு மனம் புதிய விஷயங்ளில் ஈடுபட ஆரம்பித்து விட்டது அவ்வளவு தான். எதிர்மறை எண்ணங்களை சுமந்து கொண்டிருந்தால் மனம் அதிலேயே ஈடுபடும். வேண்டாத சுமையை கீழே இறக்கி விட்டால் நேர்மறை எண்ணங்கள் மனதை வழி நடத்தும். அதுவே வெற்றிக்கான தாரக மந்திரம்.