கருமத்தம்பட்டி: எளச்சிபாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு மற்றும் பொங்கல் திருவிழா இன்று நடக்கிறது. கருமத்தம்பட்டி அடுத்த எளச்சிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டு மற்றும் பொங்கல் திருவிழா துவங்கியது. காப்பு கட்டுதல் மற்றும் விநாயகர் பொங்கல் வைத்தல் நடந்தன.இரவு 8:00 உடுக்கை ஆட்டத்துடன் கரகம் எடுத்து வரப்பட்டு, அக்னி கம்பம் நடப்பட்டது. நேற்று, அபிஷேக பூஜை, தீபாராதனை முடிந்து, பக்தர்கள் கம்பம் சுற்றி ஆடினர். அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பஜனை மற்றும் நாட்டியம் நடந்தது. குதிரை வாகனத்தில் அம்மை அழைத்தல் நடந்தது. இன்று, மாவிளக்கு பூஜையும், அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. அதன்பின், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.