பதிவு செய்த நாள்
10
மார்
2021
12:03
திருப்பூர்:மகாசிவராத்திரி பூஜையில், பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை; எக்காரணத்தை கொண்டும் சிவாலயங்களை பூட்டி வைக்க கூடாதென, வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது.
மகா சிவராத்திரி விழா, நாளை நடக்க உள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி, பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில் உட்பட, திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளில் உள்ள சிவாலயங்களில், சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, நான்கு கால ஆராதனை நடக்க உள்ளது. முதல்கால பூஜை நாளை இரவு, 7:00 மணி; இரண்டாம் காலபூஜை, இரவு 10:00 மணி, மூன்றாம் காலபூஜை, இரவு 12:00 மணி; நான்காம் கால பூஜை, அதிகாலை, 4:30 மணிக்கு நடக்கும்.நான்கு காலமும் மூலவருக்கு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகளும், பன்னிரு திருமுறை பாராயணம், பஜனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மூன்றாம் காலபூஜையில் மட்டும், மூலவர் மற்றும் லிங்கோத்பவருக்கும் அபிேஷக பூஜைகள் நடக்க உள்ளன.
வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தொற்று குறைந்துள்ளதால், பக்தர்கள் தரிசனம் செய்ய தடையில்லை. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் ஏற்பாடு செய்துள்ளன. நான்குகால பூஜைகளும் தடையின்றி விமரிசையாக நடக்கும்.பக்தர்கள் கூட்டமாக சேர அனுமதியில்லை. அபிேஷக நேரத்தில் மட்டும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். எக்காரணத்தை கொண்டும், கோவில்கள் பூட்டி வைக்க கூடாதென அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கெடுபிடி செய்ய கூடாது!: இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், மகா சிவராத்திரியில், சிவன் கோவில்களில், கெடுபிடி செய்யாமல், பக்தர்களை அனுமதிக்க வேண்டும். அனைத்து கோவில்களிலும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பறிக்க கூடாது. வருவாய்த்துறையின், தைரியமான நடவடிக்கை எடுத்து, நான்குகால பூஜையிலும், பக்தர்கள் மன அமைதியுடன் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும், என்றார்.