பதிவு செய்த நாள்
10
மார்
2021
01:03
சிவகங்கை : பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23 அன்று இரவு 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 23 அன்று காலை 10:35 மணிக்கு நவசக்தி ேஹாமம், லட்சார்ச்சனை மற்றும் அன்று இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதனை தொடர்ந்து தினமும் இரவு 10:30 மணிக்கு அம்மன் சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் திருவீதி உலா வருகின்றார். ஏழாம் திருநாளான மார்ச் 30 அன்று பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர்.
மார்ச் 31 அன்று இரவு 7:25 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட மின்னொளி சப்பரத்தில் முத்துமாரியம்மன் வீதி உலா வருவார். ஏப்., 1 அன்று காலை 7:00 மணி முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, கரும்பு தொட்டில் ஏந்தி நேர்த்தி செலுத்துவர். அன்று மாலை 6:00 மணிக்கு ஊஞ்சலில் அம்மன் எழுந்தருள்வார். இரவு 10:30 மணிக்கு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருவார். ஏப்.,2 ம் தேதி இரவு 7:35 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் பங்குனி திருவிழா நிறைவு பெறுகிறது.திருவிழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகிறார். பங்குனி திருவிழாவிற்கு பக்தர்களின் வருகைக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, ராமநாதபுரம், மதுரையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.