பதிவு செய்த நாள்
20
ஏப்
2021
09:04
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில் செதுக்கப்பட்ட, ராமஜென்ம பூமிக்கான ராமர் கோவில் மாதிரி மரச்சிற்பம், உ.பி., மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் சிற்பக் கலைகளுக்கு புகழ்பெற்றது. கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மன்னர்கள், அக்காலத்தில், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில், பாறைகளில், சிற்பங்கள் வடித்தனர். இக்கலை, தற்காலத்திலும் சிறந்து விளங்குகிறது.மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கற்சிற்ப கூடங்கள் அதிகம் உள்ளன. இவற்றில், கடவுள் உள்ளிட்ட சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. சுதை, மரம், உலோகம் ஆகியவற்றிலும் சிற்பங்கள் வடிக்கப்படுகின்றன.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைக்கப்படும், ராமர் கோவில் கட்டுமானத்தில், கட்டட, சிற்ப பணிகள் வாய்ப்பை பெற, தமிழக கலைஞர்கள் முயன்று வருகின்றனர்.முதல் வாய்ப்பாக, ராமஜென்ம தீர்த் ஷேத்ரா என்ற அறக்கட்டளை, கோவிலின் மாதிரி மரச்சிற்பம் வடிவமைக்க, மாமல்லபுரம், மானசா மரச்சிற்பக் கூடத்திற்கு வாய்ப்பு வழங்கியது.ராமர் கோவில் கட்டுமானத்தை பார்வையிடும் பக்தர்கள், அதன் முழுதோற்ற அமைப்பை காண, தேக்கு மரத்தில், 8 அடி நீளம், 5 அடி அகலம், 3 அடி உயரம் அளவில், 120 கிலோ எடையில், ராமஜென்ம பூமி ராமர் கோவிலின் மாதிரி மரச்சிற்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இச்சிற்பம், அயோத்திக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், ராம நவமி நாளான நாளை, கோவில் அமைவிட பகுதியில், சிறப்பு வழிபாட்டுடன் நிர்மாணிக்கப்பட உள்ளது.இது குறித்து, சிற்பத்தை வடித்த சிற்பக்கலைஞர் கே.ரமேஷ் கூறியதாவது:அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில், கட்டடம், சிற்பம் ஆகிய கலைப்பணிகள் அதிகம் உண்டு. இவற்றில், மாமல்லபுரம் உள்ளிட்ட தமிழக கலைஞர்களுக்கு, பணி வாய்ப்பு பெற முயற்சிக்கிறோம். இதற்காக, கோவில் மாதிரி மரச்சிற்பம் வடிக்க, ராமஜென்ம தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை வாய்ப்பளித்தது; 25 கலைஞர்களுடன், ஆறு மாதங்களில் இதை வடித்தோம். இதன் மதிப்பு, 8 லட்சம் ரூபாய். இப்பணி அனுபவம், மற்ற பணிகளுக்கும் வாய்ப்பளிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.