பதிவு செய்த நாள்
19
மே
2021
05:05
கோவை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் கொரோனா தேவி என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க, கோவையில், கொரோனா தேவி சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய துவங்கியுள்ளனர்.கோவை காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.
கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.