பதிவு செய்த நாள்
20
மே
2021
11:05
சென்னை: மருத்துவமனை வளாகத்தில், கோவில் அன்னதானத் திட்டத்தின் வாயிலாக தயாராகும் உணவுப் பொட்டலங்கள் வழங்கும் திட்டத்தை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
கொரோனா தொற்றின், இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது. கடந்தாண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு பிரச்னை துவங்கியதில் இருந்து, அன்னதானம் வழங்கும் திட்டம் உள்ள கோவில்களில், சிறிய அளவில் உணவு தயாரித்து, சுற்றுப்புற பகுதிகளில் வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேகர்பாபு, அன்னதானத் திட்டத்தை புத்துயிர் பெறச் செய்தார்.மீண்டும், அதிகளவில் உணவு தயாரித்து, மருத்துவமனை வளாகங்கள், ஏழை மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன் படி, அன்னதான திட்டம் உள்ள கோவில்களில், உணவு தயாரித்து பொட்டலங்களாக மருத்துவமனை வளாகம், ஏழை மக்கள் உள்ள பகுதிகளில் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான துவக்க விழா, ஓமந்துாரார் மருத்துவமனை வளாகத்தில், நேற்று நடந்தது. அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அன்னதானத்திட்டம் மூலம் தயாரிக்கப்பட்ட உணவு பொட்டலங்களை, சிகிச்சை பெறும் நோயாளிகள், அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், எம்.பி., தயாநிதி மாறன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணைக் கமிஷனர்கள் காவேரி, ஹரிப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.