பதிவு செய்த நாள்
11
ஜூன்
2021
07:06
வாழ்வில் அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறதா... கவலை வேண்டாம். குஜராத்தில் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள பிரபாசப்பட்டணம் சோமநாதர் கோயிலுக்கு வாருங்கள். ஜோதிர்லிங்கத்தலமான இங்கு சந்திரன் வழிபட்டுள்ளார்.
தட்சனின் 27 மகள்களையும் திருமணம் செய்து வாழ்ந்தான் சந்திரன். அவர்களில் ரோகிணியிடம் மட்டும் அன்பாக நடந்து கொண்டான். மற்ற பெண்கள் இதுபற்றி தந்தையிடம் முறையிட்டனர். தட்சன் கோபத்தில் சந்திரனுக்கு தொழுநோய் ஏற்படும்படி சபித்தார். அழகான சந்திரன் நோய்வாய்ப்பட்டு வருந்தினான். பின், சிவனை வழிபட்டு பாவ விமோசனம் பெற்றான். 15 நாட்கள் கலைகள் வளரவும், 15 நாட்கள் கலைகள் தேயவும் சிவபெருமான் வரம் கொடுத்தார். சிவபெருமான் சந்திரனுக்கு முட்டை வடிவிலான ஒரு ஜோதிர்லிங்கத்தைக் கொடுத்தார். மகாசிவராத்திரியன்று ஜோதிர் லிங்கத்தை பூமியில் பிரதிஷ்டை செய்த சந்திரன், அதன்மீது பெரிய சிவலிங்கத்தையும் நிர்மாணித்தான். அந்த லிங்கமே சந்திரனின் பெயரால் சோமநாதலிங்கம் எனப்பெயர் பெற்றது. அந்த இடமே சோமநாதபுரமாகும். சோமநாதரை வில்வம், மலர்களால் அர்ச்சனை செய்கின்றனர். முன்வினை பாவம் தீரவும், இறப்பிற்கு பின் முக்தி கிடைக்கவும் வேண்டிக் கொள்கின்றனர்.
சிவன் இங்கு பார்வதி தேவியுடன் அருள்பாலிக்கிறார். செல்வ வளத்துடன் விளங்கிய இக்கோயில் மீது கஜினிமுகமது 17 முறை படையெடுத்தான். கோயிலை இடித்து கிடைத்த தங்க ஆபரணங்களை அள்ளிச்சென்றான். தொடர்ந்து அலாவுதீன் கில்ஜி, குத்புதீன், துக்ளக், அவுரங்கசீப் ஆகியோரும் இக்கோயில் மீது படையெடுத்தனர். ஏழுமுறை இடிக்கப்பட்ட இக்கோயில் சர்தார் வல்லபாய் படேலின் முயற்சியால் புதிதாக அமைக்கப்பட்டது. இப்பகுதியில் 135 சிவன்கோயில்கள் உள்ளன.
பார்வதிக்கு 25 கோயில்களும், சூரியனுக்கு 16 கோயில்களும், விஷ்ணுவுக்கும், விநாயகருக்கும் தலா 5 கோயில்களும், நாகருக்கும், சந்திரனுக்கும் ஒரு கோயிலும் உள்ளன. இது தவிர 19 தீர்த்தக்கிணறுகள் உள்ளன. குறிப்பாக இரண்யா, கபிலம், சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி, சந்திரகுண்டம் ஆகியவை முக்கியமான தீர்த்தங்கள், ராமேஸ்வரத்தில் இருப்பதுபோலவே எல்லா தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடுகின்றனர்.
சோமநாதபுரத்தில் இருகோயில்கள் உள்ளன. ஒன்று ராணி அகல்யாபாயால் கட்டப்பட்டது. இங்கு கருவறைக்கு செல்ல குறுகிய பாதை வழியே படிக்கட்டுகளில் இறங்கினால் பாதாளத்தில் சிவலிங்கத்தை தரிசிக்கலாம். மீண்டும் படிக்கட்டுகளில் ஏறினால் விஸ்வநாதர், அன்னபூரணி, விநாயகர், பைரவர், காளியை தரிசிக்கலாம். மகிஷாசுரமர்த்தினி சந்நிதியும் உண்டு. புதிய சோமநாதர் கோயில் கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. சலவைக் கற்களால் அமைந்த இக்கோயிலில் பார்வதி, அனுமன், துர்கை, விநாயகருக்கு சந்நிதிகள் உள்ளன. கர்ப்பகிரகத்தின் மேலே பல கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன.
எப்படி செல்வது: குஜராத் ஜூனாகட் மாவட்டத்தில் இருந்து 95 கி.மீ.,