ஒடிசா: ஒடிசாவில் உள்ள, உலகப் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை திருவிழா, இன்று (ஜூலை 12) துவங்குகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு கடந்த நேற்று இரவு 8 மணி முதல் ஜூலை 13ம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெகந்நாதர் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளதாவது: ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி நடைபெறும். உச்ச நீதிமன்ற மற்றும் ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும். 65 பட்டாலியன் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கோவிட் பேரிடர் காலம் என்பதால், கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். போலீசார் மட்டுமின்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள். ரத யாத்திரையில் பங்கேற்கும் கோவில் ஊழியர்களுக்கு கோவிட் இல்லை என்ற சான்றிதழும் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.