பதிவு செய்த நாள்
13
ஜூலை
2021
08:07
புரி : புரி ஜெகன்னாதர் கோவில் ரத யாத்திரை உற்சவம், பக்தர்கள் ஆரவரமின்றி அமைதியாக துவங்கியது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலனா பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது. புரி ஜெகன்னாதர் கோவிலில், 12ம் நுாற்றாண்டு முதல், ரத யாத்திரை உற்சவம் பக்தர்கள் வெள்ளத்தில் விமரிசையாக நடப்பது வழக்கம்.சான்றிதழ்கொரோனா பரவலால் கடந்த ஆண்டு போல், இந்தாண்டும் பக்தர்கள் இன்றி ரத யாத்திரையை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி நேற்று புரி ஜகன்னாதர் கோவில் ரத யாத்திரை, பக்தர்களின் வழக்கமான சிலம்பு சுழற்றுதல், சங்கு ஓடுகளை வீசுதல் ஏதுமின்றி அமைதியாக துவங்கியது.கோவில் முன் சிவப்பு, கறுப்பு, பச்சை மற்றும் மஞ்சள் வண்ண துணிகளால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ரதங்களில், ஜகன்னாதர், பாலபத்ரா தேவி, சுபத்ரா சிலைகள் எழுந்தருளின. கொரோனா பாதிப்பு இல்லை என, சான்றிதழ் பெற்ற சிலர் மட்டும் ரதங்களை இழுத்தனர். வழக்கமாக பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருக்கும் மாட வீதிகளில் போலீசார் உள்ளிட்ட சிலர் மட்டுமே காணப்பட்டனர். வீடுகளின் மாடிகளில் மக்கள் கூடி ரத யாத்திரையை தரிசிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் நேற்று புரியில் ஊரடங்கு அமலானதுடன், அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டனர்.வாழ்த்துகுஜராத்தின் ஆமதாபாதில் உள்ள ஜகன்னாதர் ஆலயத்தின் 144ம் ஆண்டு ரத யாத்திரை நேற்று தொடங்கியது. கொரோனாவால், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மூன்று ரதங்களையும் வாகனங்களின் உதவியுடன் இளைஞர்கள் இழுத்தனர். முன்னதாக, முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் ரதங்கள் செல்லும் வழியை சம்பிரதாயப்படி சுத்தம் செய்தனர். ஜெகன்னாதர் கோவில்களில் நடக்கும் ரத யாத்திரை தொடர்பாக, பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.