புரி: ஒடிசா மாநிலம் புரியில் உலக பிரசித்திப் பெற்ற ஜெகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறும். இவ்வாண்டுக்கான ரத யாத்திரை நேற்று நடைபெற்றது. ஜெகநாதர் சுவாமி வைக்கப்பட்டிருந்த மரத்திலான ரதம் 45 அடி உயரமும், 16 மிகப் பெரிய சக்கரங்களையும் கொண்டதாக இருந்தது. அதேபோல், பாலபத்ரா மற்றும் தேவி சுபத்ரா ஆகியோரது ரதங்கள் 44 அடி உயரமும், 14 சக்கரங்களைக் கொண்டதாகவும் இருந்தன. முன்னதாக பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, உற்சவ மூர்த்திகள் ரத்தின சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு, 22 படிகள் கடந்து ரதத்தில் ஏற்றப்பட்டனர். பின்னர் ரதங்கள் புறப்பட்டன. ரத யாத்திரை நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். இதேபோல் குஜராத் ஜமால்பூரில் உள்ள ஜெகநாதர் கோவிலிலும் நேற்று ரதயாத்திரை நடைபெற்றது. இந்த 135வது ரத யாத்திரையை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி துவக்கிவைத்தார்.