பதிவு செய்த நாள்
01
ஆக
2021
03:08
புதுடில்லி-ஹிந்து, சீக்கியர் உள்ளிட்டோரின் வழிபாட்டு தலங்களை மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். அனைத்து மதங்களுக்கும் பொதுவான சட்டம் உருவாக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஜீயர் ஸ்வாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:முஸ்லிம், கிறிஸ்துவர் மற்றும் பார்சி இன மக்களுக்கு தங்கள் வழிபாட்டு தலங்களுக்கு சொந்தமான சொத்துக்களை பராமரிக்கும், நிர்வகிக்கும், புதிய சொத்து வாங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த மதத்தினருக்கு இதுபோன்ற உரிமை வழங்கப்படவில்லை. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இந்த மதத்தினரின் வழிபாட்டு தலங்கள் உள்ளன.
மத விவகார நிர்வாகத்தில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது என அரசியல் சாசனம் கூறிஉள்ளது.குறிப்பிட்ட மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களே அந்த மதத்துக்கு சொந்தமான வழிபாட்டு தலங்கள், சொத்துக்களை சிறப்பாக பராமரிக்க முடியும். மாநில அரசுகளால் செய்ய முடியவில்லை.முஸ்லிம், பார்சி, கிறிஸ்துவ மதங்களுக்கு வழங்கியுள்ளதுபோல் ஹிந்து, ஜெயின், புத்த, சீக்கிய மதத்தினருக்கும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை பராமரிக்கும், நிர்வகிக்கும் அதிகாரம், உரிமை வழங்கப்பட வேண்டும்.இல்லையெனில் நாடு முழுதும் அனைத்து மதங்களுக்கும் பொதுவான விதிகளை உருவாக்கும்படி, மத்திய அரசு மற்றும் சட்ட கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயும் இதுபோன்ற மனுவை ஏற்கனவே தாக்கல் செய்துள்ளார்.