பதிவு செய்த நாள்
02
ஆக
2021
04:08
தேவிபட்டினம்: தேவிப்பட்டினம் நவபாஷாணம் நேற்று காலை முதல் மூடப்பட்டதால், வெளியூர்களில் இருந்து தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாணம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி, தை, அமாவாசை தினங்களில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, புனித நீராட வருகை தரும் பகுதியாகவும், திகழ்ந்து வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாணத்திற்கு நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால், வெளியூர்களிலிருந்து ஏராளமான வாகனங்களில், பக்தர்கள் நவபாஷாணம் வந்திருந்தனர். ஆனால் கொரோனா மூன்றாம் அலை எச்சரிக்கையாக, நேற்று அதிகாலை முதல் நவபாஷான கடற்கரை மூடப்பட்டதால், நவபாஷாணத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.