திருப்பூர்:மீண்டும் கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதித்ததற்கு, ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:ஹிந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, கண்டிக்கத்தக்கது. மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதே, நோய் தடுப்புக்கு சிறந்த வழி. ஆனால், கோவில்களை மட்டும் குறிவைத்து மூட சொல்வது, இந்த அரசின் ஹிந்து விரோத போக்கு என்று மக்கள் நினைக்கின்றனர்.ஆடிப்பெருக்கு மற்றும் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்யும் முக்கியமான ஆடி அமாவாசை நாட்களில் பக்தர்கள் ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் பூஜைகள் செய்வர். இவற்றை அரசு தடை செய்திருப்பது வேதனைக்குரியது. காலை முதல் இரவு வரை, சமூக இடைவெளியோடு பக்தர் தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.