பதிவு செய்த நாள்
02
ஆக
2021
05:08
கடலுார் : கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு தடை விதித்ததால், வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், இந்த ஆண்டாவாது சிலை விற்க அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயத்தமாகி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தப்படும். அதற்காக, கடலுார் மாவட்டத்தில் முதுநகர் மணவெளி, வண்டிப் பாளையம், பண்ருட்டி அரசூர், வையாபுரிபட்டினம், பையூர், பேரங்கியூர் உட்பட பல கிராமங்களில், 5 அடி முதல் 15 அடி உயரம் வரையுள்ள சிலைகள் தயார் செய்து வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, பெங்களூரு, மும்பை, டில்லி என பல மாநிலங்களுக்கும் விற்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு 6 மாதம் முன்பாக கடலுார் மாவட்டத்தில் சிலைகள் செய்யும் தொழிலை துவக்கி விடுகின்றனர்.கடந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்திக்காக, கடலுார் மாவட்டத்தில் சிலை செய்யும் தொழிலாளர்கள், கடன் வாங்கி ரூ. பல லட்சம் செலவில் 10 அடி உயரமுள்ள சிலைகளை தயார் செய்தனர். கொரோனா தொற்று அதிகரிப்பதால், பொது இடங்களில் விநாயகர் சிலை நிறுவுதல், வழிபடுதல், சிலையை கரைத்தலுக்கு அரசு தடை விதித்தது. இதனால், மாவட்டத்தில் இத்தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள் செய்த சிலைகள் தேங்கி வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வரும் செப்., 10ம் தேதி வர உள்ள நிலையில், விழா கொண்டாடவும், சிலைகள் பிரதிஷ்டை மற்றும் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என, தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் ேஷமநாராயணன் தலைமையில் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.இதனால், இந்த ஆண்டு எப்படியும் அனுமதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், விநாயகர் சிலை செய்யும் மண்பாண்ட மற்றும் பொம்மை தொழிலாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கடலுார் மாவட்டத்தில் முதுநகர் மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு செய்த சிலைகளை துாசு தட்டி வர்ணம் பூசுதல், குறைந்த அளவு உயரம் கொண்ட சிலைகளை புதியதாக செய்யும் பணியையும் துவக்கி உள்ளனர். வாழ்வாதாரம் பாதித்த தங்களுக்கு இந்த ஆண்டு அரசு முன்கூட்டியே அனுமதி அளித்தால் சிலைகளை விற்க வசதியாக இருக்கும், அதன் மூலம் கடந்த கால பாதிப்பில் இருந்து மீள முடியும் என்கின்றனர்.