திருப்புத்துார் வழி செல்லும் பாலாறு,விருசுழியாற்றின் நீர் வரத்தால் பெருகுவது சீதளி தெப்பக்குளம். இக்குளத்தின் கிழக்கு திசை பிராமணப்படித்துறையில் நேற்று காலை முதல் புதுமணத்தம்பதியர் மட்டுமின்றி திருமணமாகி பல ஆண்டுகளாகிய தம்பதியர் பலரும் வந்தனர். படித்துறையில் மஞ்சள் நீரால் கழுவி, வாழை இலை விரித்து மங்கள பொருட்கள், பூஜை பொருட்கள், பழங்கள், மஞ்சள் கயிறு சந்தனம்,குங்கும்,திருநீறு வைத்து தீபம்
ஏற்றி பிரார்த்தித்தனர். பின்னர் புதுமணத்தம்பதியர்களுக்கு தாலிக் கயிற்றை பிரித்து புதுமஞ்சள் கயிறு சேர்ந்து பெரியவர்கள் எடுத்து கொடுத்து தாலிப்பெருக்கி கட்டினர்.பலர் குழந்தைகளுடன் குடும்பமாகவும் வந்து பிரார்த்தித்தனர். கருணாம்பிகை கணேசன் என்பவர் கூறுகையில்,‛ நாங்கள் திருமணமான ஆண்டு முதல் வந்து சீதளி தீர்த்தத்தை ஆடிப் பெருக்கு அன்று பிரார்த்தித்து வருகிறோம். குழந்தைகளுடன் வந்து அவர்களையும் நமக்கு வாழ்க்கையில் இன்றியமையாத நீரை பிரார்த்திக்க வைத்து, அதன் பின்னர் வீட்டிற்கு சென்று பூஜையறையில் தாலிப்பெருக்கிக் கட்டுவோம். இது மனதிற்கு நிறைவாகவும், மகிழ்ச்சியையும் தருகிறது. ’ என்றார். கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால். கோவில் ராஜகோபுர வாசலில் நின்று வணங்கி சென்றனர்.