திருப்புவனம்: கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் அகரத்தில் மார்பளவு சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டது. அகரத்தில் இதுவரை எட்டு குழிகள் தோண்டப்பட்டு முத்திரை, தங்க காதணி, பானைகள், பானை ஓடுகள், உறைகிணறுகள், செங்கல் கட்டுமான சுவர் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
7ம் கட்ட அகழாய்வில் விலங்கு உருவ பொம்மை, தலையலங்கார பொம்மை, உள்ளிட்டவை கிடைத்துள்ள நிலையில் தற்போது கிடைத்துள்ள மார்பளவு பெண் பொம்மையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்விலும் பொம்மை அச்சுகள் கிடைத்துள்ள நிலையில் அகரம் ஒரு வணிக நகராகவும் திகழ்ந்திருக்க கூடும், காரணம் இங்கு முத்திரையும் கிடைத்துள்ளதால் வணிக நோக்கத்திற்காக வருபவர்களுக்கு முத்திரையிட்டிருக்கலாம் என கருதுகின்றனர். மேலும் அகரத்தில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட வட்ட வடிவ மோதிரம், உடைந்த சங்கு வளையல்களும் கண்டறியப்பட்டுள்ளன. கீழடியை காட்டிலும் அகரம் வணிக நகராக திகழ்ந்ததற்கான சான்றுகள் அதிகளவில் கிடைத்து வருவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.