பதிவு செய்த நாள்
15
செப்
2021
12:09
திருச்செந்துார்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ரூ.150 கோடியில் தனியார் மற்றும் அறநிலையத்துறை நிதியுடன் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் திருப்பணிகள் துவங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொள்ள வந்தார். தொடர்ந்து மூலவர், மற்றும் சண்முகர் சன்னதியில், சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் அவர், அன்னதான மண்டபத்தில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வரைவு திட்டம் தயார் செய்யப்பட்டு, தனியார் மற்றும் அறநிலையத்துறை பங்களிப்புடன் ரூ. 150 கோடி செலவில் கோயில் புனரமைப்பு பணிகள், பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளது. இதற்கான ஆய்வு ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்களை மீண்டும் அதிகாரிகளின்ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும் . பின்ன ர் முதல்வரின் உத்தரவை பெற்று இதற்கான பணிகள் விரைவில் துவங்கும். இக்கோயிலில் வி.ஐ.பி., தரிசனத்தை கட்டுப்படுத்த, கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோயிலில் ஷிப்ட் முறையில் அர்ச்சகர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். திருச்செந்துார், திருத்தணி, சமயபுரம் ஆகிய கோயில்களில், நாளை முழு நேர அன்னதான திட்டத்தை முதல்வர் வீடியோ கான்பரசிங் மூலம் துவங்கி வைக்க உள்ளார்.