லக்னோ: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினார்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சியை தயார்படுத்தும் பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்து கட்சி பணிகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள ரோஹானியா பகுதியில் காங்கிரஸ் சார்பில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் வாரணாசி வந்தடைந்தார். அவருடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வாரணாசி வந்தடைந்த பிரியங்கா, பேரணியில் பங்கேற்பதற்கு முன்னர் கோயில்களில் வழிபாடு நடத்தினார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய அவர், அன்னை துர்கா கோயிலுக்கும், மாதா அன்னபூர்ணா கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.