மைசூரு : மைசூரு தசாரா யானைகள் மிரளாத வண்ணம் தொடர் ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது.
மைசூரு தசரா ஜம்பு சவாரிக்கு பயிற்சி எடுத்து கொண்டிருந்த போது, விக்ரம் என்ற யானைக்கு மதம் பிடித்ததால், ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.இதே போல, மாண்டியா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நேற்று முன்தினம் தசரா ஜம்பு சவாரி ஊர்வலம் புறப்படும் நேரத்தில் பட்டாசு வெடித்ததால், யானை கோபாலசாமி மிரண்டது.இதனால் பாகன்கள், அதிகாரிகளுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. மைசூரு ஜம்பு சவாரியின் போது பிரச்னை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர் ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. கடைசி நாள் வரை ஒத்திகை நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது.இது குறித்து வனத்துறை அதிகாரி கரிகாலன் கூறியதாவது:ஜம்பு சவாரி செல்லும் பாதையை நீட்டிக்க, போலீசாருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதிக சத்தம் ஏற்படாமல் இருக்க கவனம் செலுத்தப்படும். இறுதி ஒத்திகை நடந்து வருகிறது.மைசூரு தசரா ஊர்வலத்தின் போது பொதுமக்கள் யாரும் யானைகளின் அருகில் நெருங்காதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.