திருப்பரங்குன்றத்தில் சஷ்டி விழா: பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2021 11:10
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீபாவளி அன்று (நவ., 4) சண்முகர், வள்ளி, தெய்வானை, உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டுடன் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ள இந்தாண்டு அனுமதி கிடைக்குமா என பக்தர்கள் எதிர் பார்த்துள்ளனர்.
இத்திருவிழாவில் வழக்கமாக சுவாமிக்கு காப்பு கட்டு முடிந்தபின் கோயிலில் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் 6 நாட்கள் தங்கி விரதம் இருப்பர். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்தாண்டு கோயிலில் தங்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. திருவிழா ரத்து செய்யப்பட்டு, கோயிலுக்குள் மட்டும் சுவாமி புறப்பாடு நடந்தது. கிரிவலம் செல்லவும் அனுமதிக்கப் படவில்லை. சஷ்டி திருவிழாவில் இந்தாண்டு கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.