திருப்பூர்: அண்ணமார் குதிரையில் சென்று வேட்டையாடும் காட்சி கொடுவாய் நாகேஸ்வரசுவாமி கோயிலில் புடைப்பு சிற்பமாக கண்டறியப்பட்டுள்ளது.
கொங்குநாட்டு மக்களின் கலை நிகழ்ச்சியாக முன்பு குன்றுடையான் கடை உடுக்கையடி பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. தலையூர் காளி வளர்க்கும் பன்றி பயிர்களை அழித்து வந்துள்ளது. அதற்காக சோழ மன்னனின் வேண்டுதலை ஏற்று அண்ணமார் பன்றியை வேட்டையாடி கொன்றனர் என இந்த பாடல் நிகழ்ச்சியில் கூறப்படுகிறது.
பன்றி வேட்டைக்கு அண்ணமார் சுவாமிகள் குதிரையில் புறப்படும் காட்சி கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோயில் மண்டப நுழைவாயிலில் புடைப்பு சிற்பமாக பொறிக்கப் பட்டு உள்ளது.திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய நிர்வாகி கவிதாசன் கூறுகையில் கொங்குநாட்டில் உள்ள கிராமங்களில் அண்ணமார் சுவாமிகள் குதிரையில் அமர்ந்திருக்கும் சுடுமண் சிற்பங்களே உள்ளன. கொடுவாய் நாகேஸ்வர சுவாமி கோயில் நுழைவாயில் அருகே பன்றி வேட்டை காட்சி புடைப்பு சிற்பமாக பொறிக்கப்பட்டுள்ளது; இது கொங்கு வளநாட்டின் வரலாற்றை விளக்குவதாக அமைந்துள்ளது என்றார்.