பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
05:06
நிச்சயம் நாம் சர்வமத மகாசபை கூடும் நாள் வரையில் இங்கேயே தான் இருப்போம். எனது குருநாதர் ராமகிருஷ்ணரும், தாய் சாரதாதேவியாரும் அங்கீகரித்து தானே இங்கே வந்திருக்கிறோம். அது தோற்றுப்போகவா செய்யும். சரி... மகாசபை கூடும் வரை, சிகாகோவில் நாம் தங்க வேண்டியதில்லை. இங்கே செலவு அதிகம். அருகிலுள்ள போஸ்டனுக்கு சென்றுவிட்டால் செலவு குறையும். மேலும், நமது தேவைக்கு நம்மை இங்கே அனுப்பிய சென்னை சீடர்களுக்கு கடிதம் எழுதினால், பணம் கிடைக்காமலா போய்விடும் ! என நினைத்தார். போஸ்டன் நோக்கி ரயிலில் கிளம்பினார். அவர் இருந்த பெட்டியில், மிஸ்கேட் ஸன்பார்ன் என்ற பெண்மணி இருந்தார். அவர் போஸ்டன் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் செல்வச் சீமாட்டி. சுவாமிஜியின் வித்தியாசமான தோற்றம் கண்ட அவர், அவருடன் பேசினார் சுவாமிஜியின் கருத்துக்கள் அவரை கவர்ந்து விட்டன. சுவாமிஜியின் மகாசபை கனவை அறிந்த அவர், அதற்கென்ன ! நீங்கள் எனது வீட்டில் என் விருந்தாளியாகத் தங்கலாம் என்றார். சுவாமிஜியின் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்து விட்டது.
தங்குமிடம், உணவு கிடைத்து விட்டால் பிறகென்ன செலவு ! சுவாமிஜி அவரது அன்பான அழைப்பை எற்று அவரது இல்லத்திலேயே தங்கினார். மெட்காப் என்பது அவர் தங்கியிருந்த கிராமத்தின் பெயர். அந்த அம்மையார் ஒரு ஆசிரியை. அவரது வீட்டுக்கு இளங்காற்று புல்வெளி என்று பெயர் வைத்திருந்தார். 54 வயதானாலும் தளர்ச்சியின்றி உற்சாகமாகவே இருந்தார். அவர், தன் நண்பர்கள், தோழியரை அழைத்து வந்து விவேகானந்தரை அறிமுகம் செய்து வைத்தாள். அவர்கள் இந்துமதத்தைப் பற்றி கொண்டிருந்த தவறான எண்ணங்களுக்கு தகுந்த விளக்கமளித்ததும், ஆச்சரியப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கா குளிர்காலம் ஆரம்பிக்கவே, கம்பளி வாங்க ஒரு பெரும் தொகையை சுவாமி செலவிட வேண்டியதாயிற்று மேலும், மிஸ் கேட் அம்மையார் வற்புறுத்தலுக்கு இணங்க, மேல்நாட்டு பாணி உடையையும் சுவாமிஜி அணிய வேண்டி வந்தது. நீங்கள் எங்களைப் போல் இருந்தால் தான், எங்களவர் உங்களை நெருங்கி வருவர் என்ற அம்மையாரின் வார்த்தையின் படி அவர் நடக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் கையிருப்பில் பெரும்பகுதி கரைந்து விட்டது.
ஆனால், சுவாமிஜி தன் மனதுக்குள், அமெரிக்காவில் தங்கியிருக்கு காலத்தில் பொதுமேடையில் ஏறும் போது, காவி ஆடையே உடுத்த வேண்டு என உறுதியெடுத்தா. மெட்காப் கிராமத்தில் ஒரு மகளிர் மன்றம் இருந்தது. அங்கே சுவாமிஜி பேசவேண்டும் என மிஸ்கேட்டின் தோழியர் கேட்டுக் கொண்டனர். அதுதான் சுவாமியின் முதன் அமெரிக்கா சொற்பொழிவு. அங்கே பேசிய விவேகானந்தர், இயேசுநாதர் சொன்ன நற்கருத்துக்களை மேற்கோளிட்டு பேசியதையும் பிற மதத்தினர் மீது அவருக்கு தாழ்ப்புணர்ச்சி இல்லாததையும் கண்டு அந்த பெண்கள் அவரை பெரிதும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ரைட் என்பவர் தன் மனைவியுடன் சுவாமியை சந்தித்தார். அவர் கிரேக்க மொழி அறிந்தவர். சுவாமிஜி சொன்ன இந்து மதக்கருத்துக்கள் அவரைக் கவரவே தங்கள் வீட்டுக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்தார். சுவாமிஜியும் மிஸ் கேட் அம்மையாரிடம் விடை பெற்று, ரைட்டின் ஊரான அன்னிஸ்க்வாம் சென்றார். திருமதி ரைட் சுவாமிஜியிடம் தீவிர ஆர்வம் கொண்டார். அவரிடம் சுவாமிஜி, எங்கள் நாட்டின் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்கள் சிதைத்து விட்டனர். இதற்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நாள் வரும். இன்று பின்தங்கியுள்ள ரஷ்யர்களும், சீனர்களும் அவர்களுக்கு எதிராக மாறி அவர்களை வஞ்சம் தீர்ப்பர். ஆண்டவனுக்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்றார்.
அவரது தீர்க்க தரிசனம் மெய்யாகி விட்டதை இப்போது நாம் பார்க்கத்தானே செய்கிறோம் ! இதனிடையே மகாசபை கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து தேதி குறிக்கப்பட்டு விட்டது. மகாசபை கூட்டத்தில் பேச வேண்டுமானால், சில நிபந்தனைகள் இருந்தது இங்கே வந்த பின் தான் சுவாமிக்கு தெரிந்தது. எந்த நாட்டில் இருந்து வருகிறாரோ, அங்கேயுள்ள பிரபலமான மத அமைப்புகள் கடிதம் கொடுத்து சிபாரிசு செய்திருந்தால் தான் பேச முடியும் என்பது ஒரு விதி. சுவாமிஜி அப்படி யாரிடமும் கடிதம் வாங்கி வரவில்லை. போதாக்குறைக்கு சுவாமிஜி ஸேலம் என்ற நகரில் ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது, அமெரிக்காவில் இருந்து கிறிஸ்தவ பாதிரியார்கள் எங்கள் நாட்டுக்கு மதபோதனை அளிப்பதற்காகவே அனுப்புகிறார்கள். அது எங்களுக்கு தேவையில்லை. தொழில் ரீதியாக தாழ்வுற்றி கிடக்கும் எங்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்க வேண்டுமானால், எங்கள் நாட்டுக்கு இங்குள்ள அரசு ஆட்களை அனுப்பட்டும், என்றார். இது பாதிரியார்களின் கோபத்தை தூண்டியது.
ஆனாலும், பேராசிரியர் ரைட்டுக்கு சர்வமத மகாசபையின் தலைவரை தெரியும் என்பதால், அவர் சுவாமிஜியை கூட்டத்தில் பேச அனுமதிக்குமாறு, ஒரு கடிதம் எழுதியிருந்தார். செப்டம்பர் மாதம் 11ம் தேதி மகாசபை கூட்டம் நடக்க இருந்தது. அதற்கு முன்னதாக ஒருநாள், சுவாமிஜி ரயிலில் சிகாகோவுக்கு சென்றார். சிகாகோவில் சர்வமத மகாசபை கூட்டம் நடக்கும் இடம் சுவாமிஜிக்கு தெரியாது, அவருடம் ரயிலில் வந்த ஒருவர், நான் வழிகாட்டுகிறேன் என்றார். அவர் ஸ்டேஷன் வந்ததும் இறங்கிப் போய்விட்டார். சுவாமிஜியின் கையில் இருந்த அட்ரசும் தொலைந்து விட்டது. என்ன இது சோதனை ? என்று கலங்கிய சுவாமிஜிக்கு, சர்வ மத மகாசபையின் தலைவர் டாக்டர் பர்ரோஸின் பெயர் மட்டும் நினைவுக்கு வந்தது. அந்தப் பெயரை வைத்துக் கொண்டு பலரிடமும் விசாரித்தார் சுவாமிஜி. யாரும் தங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டனர். இரவாகி விட்டது. சுவாமிஜி களைத்து விட்டார். ரயில் பெட்டி ஒன்றில் ஏறி படுத்தார். தூங்கி விட்டார். மறுநாள் காலை தன் வழக்கமான காவி உடையுடன், மகாசபைக்கான வழியைக் கேட்டபடியே ஒரு தெருவில் நடந்தார். பணக்காரர்கள் வாழும் பகுதி அது. அவர்கள் பதிலேதும் சொல்லாமல், சுவாமிஜியின் முகத்திற்கு எதிராக கதவையும் சாத்தினர்.