பதிவு செய்த நாள்
07
நவ
2021
02:11
ஈரோடு: தாளவாடி மலைப் பகுதியில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில், வினோதமான சாணியடி திருவிழா நடந்தது. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் மூன்றாவது நாள், சாணியடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு விழா துவங்கியது.
முன்னதாக, கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு, கோவிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணியடித்து விளையாடினர். பின், அருகே உள்ள குளத்தில் இருந்து சுவாமி அழைப்பு நடந்தது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கிராம மக்கள், சிறுவர்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு சென்றனர்.அங்கு கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டைகளாக பிடித்து, ஒருவர் மீது ஒருவர் வீசினர். பின் அனைவரும் குளத்தில் குளித்து, பீரேஸ்வரரை வழிபட்டனர்.ஊர் பெரியவர்கள் கூறியதாவது: சில நுாற்றாண்டுகளுக்கு முன், இக்கோவிலில் உள்ள சிவலிங்கத்தை எடுத்துச் சென்று, சாணம் சேகரிக்கும் குப்பை மேட்டில் வீசி விட்டனர். ஒரு நாள், மாட்டு வண்டி, குப்பை மேட்டின் மீது ஏறிச் செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது.இதைக் கண்ட மக்கள், அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது. அப்போது ஒரு சிறுவன் கனவில் வந்த சுவாமி, தீபாவளி முடிந்த மூன்றாவது நாள் சாணத்தில் இருந்து, தான் மீண்டெழுந்ததின் நினைவாக, சாணியடி திருவிழா நடத்த வேண்டும் என கூறியதாக ஐதீகம். அதன்படி சாணியடி திருவிழா நடக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.