சொரிமுத்து அய்யனார் கோயிலில் மழைவேண்டி பூஜை நடத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2012 11:07
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வருவதால் மழை வேண்டி பொதுப்பணித்துறையினர் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜூன் 1ம் தேதி துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்தாண்டில் பொய்த்து போனதால் நெல்லை மாவட்டத்தில் குறிப்பாக பாபநாசம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பில்லாமல் நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களில் ஒட்டுமொத்த விவசாயம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இச்சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 18ம் தேதி 22.40 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் மாவட்டத்தின் பல்வேறு தேவைக்கு அணையிலிருந்து அவ்வப்போது தண்ணீர் எடுத்த நிலையில் சுமார் 12 நாட்களுக்கு பின் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 31.90 அடியாகவும், நேற்று 31.70 அடியாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 112.96 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 229 கனஅடி நீர் வெளியேறியது. நேற்று சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 50.33 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.34 அடியாகவும் இருந்தது. இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை பெய்யக்கூடிய பருவம் தவறிக் கொண்டிருப்பதால் மழை பெய்ய வேண்டி பொதுப்பணித்துறை காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் விசேஷ பூஜை நடத்த முன்வர வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.